27 ஜனவரி 2010

முற்போக்காளர் முகத்திரை



டாக்டர் அம்பேத்கர் படம்போட்ட T- Shirt கொண்டுவந்ததில் பலர் முக்கிய பங்காற்றினார்கள். அதில் தோழர் வேந்தனும் ஒருவர். டாக்டர் அம்பேத்கர் T- Shirt தலித் அல்லாத முற்போக்காளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தீவிரமாக பணியாற்றுபவர்களில் வேந்தனின் பங்கு அதிகம். அதனால் அவர் அடைந்த கசப்பான அனுபவங்களும் அதிகம். அதை orkut -ல் உலக தமிழ் மக்கள் அரங்கம் என்கிற இணைய குழு மத்தில் எழுதியதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் தோழர் வேந்தன்:



அண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த பின்னலாடையை (T- Shirt) கடந்த இரு மாதங்களுக்கு (4-10.2009) முன் வெளிகொண்டு வந்தோம். அதன் வெளியிட்டு விழா மும்பையில் ‘விழித்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடைபெற்றது.


அண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த பின்னலாடையை கொண்டுவரவேண்டும் என்று முன்னெடுத்த தோழர் மதிமாறனுக்கு, அண்ணலின் உருவம் பொறித்த ஆடையை அணியும் தேவையை உண்டாக்கியது, சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி சம்பவம் தான் என்று அவர் தன்னுடைய நான் ‘யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவதை இழிவாக கருதிய மாணவர்களின் எண்ணம், அண்ணல் பற்றி எந்த அளவு தவறான கருத்து மாணவர்களிடையே பரவியுள்ளது என்பதை காட்டியது. சாதி எண்ணம் அடுத்த தலைமுறைக்கு எப்படி விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் காட்டியது.


இன்றைய சமூக சூழலில் அண்ணல் அம்பேத்கரை சாதி தலைவர் தாழ்த்தபட்ட மக்களுக்கான தலைவர் என்னும் கருத்து நிலவுகிறது. அதை தகர்த்து அவர் சாதி தலைவர் அல்ல; சாதியொழிக்க பாடுபட்ட தலைவர் என்னும் கருத்தை மக்களுக்கு குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் சகோதரர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அம்பேத்கர் பின்னலாடையை கொண்டு வந்தோம்.


எனவே இந்த ஆடையை பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சகோதரர்கள் பலர் அணிய வேண்டும் என்பதையே பிரச்சாரமாகவும் செய்தோம்.


இந்த கருத்தை தோழர் மதிமாறன் முன்னெடுத்தபோது, தலித் அல்லாத தோழர்களையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டு முயற்சியாகவே செயல்பட்டோம். ஆனால், அம்பேத்கர் பின்னலாடையை கொண்டு வந்த பிறகு, ஆடையை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் போதும் அவர்களை வாங்கி அணிய செய்ய சொல்லும் போதும் நமக்கு பல அனுபவங்கள் கிடைத்தன.


இன்னும் சொல்லப் போனால் அண்ணலின் உருவம் பொறித்த இந்த ஆடை மற்றவர்களின் சாதிப்பற்றை உரசிப்பார்க்கும் உரைகல்லாகவே இருந்தது; இருக்கும் என்றே சொல்லலாம். அது மட்டுமல்லாமல், சாதி அமைப்புச் சமூகத்தை ஆழ நோக்குவதற்கும் பயன்பட்டது. சமூகத்தில் சாதி உணர்வு கொண்ட சாதாரண மக்கள் மட்டுமல்ல, சமூகத்தை சீர்த்திருத்தும் சில முற்போக்காளர்களின் முகத்திரையை கூட நீக்கி அவர்களின் சுயசாதிபற்றை நமக்கு காட்டியது என்பது கசப்பான விடயம்.


இவற்றையெல்லாம் பார்க்கும் போது நாம் இன்னும் முற்போக்காளர்களிடமே நிறைய பணியாற்ற வேண்டி இருக்கிறது என்னும் கவலையான எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தின.

குறிப்பாக சில முற்போக்கான தோழர்கள் இதை அணிய மறுத்த காரணங்கள் வேடிக்கையானவை. அண்ணல் உருவம் பொறித்த ஆடையின் நோக்கத்தை கூறி எங்கள் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் (தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவரல்ல) ஒருவருக்கு அணிய கொடுத்தோம்.


ஆனால், அவர் “கையில் பணமில்லை” என்றார்.

நாம் கொடுத்தது ஒரே சட்டை தான். இருப்பினும் நாம் “பரவாயில்லை. வாங்கிக்கோங்க. அப்புறம் பணம் தாங்க” என்றோம்.

ஆனால் அவரோ “ச்சி..ச்சீ… அம்பேத்கர் படம் போட்ட சட்டையையெல்லாம் காசு கொடுக்காம வாங்கினா நல்லா இருக்காது. நீங்க கஷ்டப்பட்டு கொண்டு வந்திருப்பீங்க… காசு கிடைக்கும் போது நானே கேட்டு வாங்கிக்கிறேன்” என்று மழுப்பினார். இன்னும் அவர் அழைக்கவில்லை. அந்த வசதியானவருக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லைபோலும்.


தீவிர தமிழ்த்தேசியமும் பெரியாரியமும் கலந்து குழப்பும், சேகுவேரா பின்னலாடை அணியும் நண்பரிடம், அண்ணலின் பின்னலாடையை அணிய சொல்லி கேட்ட போது “நான் வெள்ளை நிற சட்டைகளை அணிவதில்லை” என்று காமெடி செய்தார்.


“என்னங்க இது வேடிக்கையாக இருக்கு. இதெல்லாம் ஒரு காரணமா?” என்று அவரிடம் நேரடியாகவே கேட்டபோது, உரிய பதிலை நமக்கு தராமல் மவுனமாக இருந்துவிட்டு, வெளியில் சென்று நமக்கு தெரிந்தர்வர்களிடம், அவர்களை பற்றி நாம் அவதூறாக பேசியதாக ‘கோல்’ மூட்டினார். இப்படி பலரிடம் நம்மை பற்றி ‘கோல்’ மூட்டி தீரா பகையை உருவாக்கினார். இவரைபோலவே பலர் கோல் மூட்டி, நம்மை பழிதீர்த்த மனத் திருப்தியை அடைந்தார்கள்.


சிலர், ஏதோ சும்மா பேருக்கு அம்பேத்கர் பின்னலாடையை வாங்கி கொண்டார்கள். அதை அவர்கள் அணிந்து நாம் பார்க்கவே இல்லை.


இன்னும் சிலர் நாம் அண்ணலின் உருவம் பொறித்த பின்னலாடையை வெளிகொண்டு வந்த பிறகு, “ஆடையை அணிவது முக்கியமல்ல. அவரின் கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும்” என்று பாடம் எடுக்க தொடங்கினர். இவர்கள் சட்டையை வாங்கவும் இல்லை. அதை வெளிகொண்டுவரும் போது அந்த விவாதத்தில் பங்கு பெறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


“ஏற்கனவே வந்திருக்குங்க அம்பேத்கர் பின்னலாடை. அதனாலதான் நாங்க கொண்டாரல்ல…” என்றார் ஏற்கனவே பலமுறை பலபேரால் கொண்டு வரப்பட்ட சேகுவேரா, பிரபாகரன், பெரியார் பின்னலாடைகளை மீண்டும் மீண்டும் புது புது வடிவத்தில் தயார் செய்து அணியும் அந்த நபர்.


எவ்வளவோ நிகழ்விற்கு வாழ்த்துக்களை வாரிவழங்கும் நம் நண்பர்களில் பலர், நம் அண்ணலின் சட்டையை வாங்கவில்லையென்றால் கூட பரவாயில்லை. காசு பணம் செலவழிக்காத அந்த வாழ்த்தை கூட தெரிவிக்க விரும்பவில்லை.


இன்னும் சிலர், அண்ணலின் உருவம் பொறித்த ஆடையை நாம் ஏதோ வர்த்தக நோக்கத்திற்க்காக கொண்டுவருவது போல அவதூறுகளை பரப்பினர். இந்த அவதூறுகளுக்கு காரணம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியும் அண்ணல் அம்பேதகர் மீதான வெறுப்பும்தான்.


இன்னும் சிலர் இதில் நாங்கள் ஏதோ தனிப்பட்ட முறையில் புகழ் அடைவதாக நினைத்து எங்கள் மீதான வெறுப்பிலும், பொறமையிலும் அவதூறுகள் கிளப்பினார்கள். மும்பையில் நடந்த விழாவை எப்படியாவது நிறுத்திவிட மிக கேவலமான வழிகளில் பெரும் முயற்சியும் செய்தனர். வெளிவந்த பிறகு சிலர், இதில் தலித் அல்லாதவர்களின் பங்களிப்பை குறிப்பிட்டு, ‘அவர்கள் அம்பேத்கர் பின்னலாடையை கொண்டுவருதற்கு என்ன யோக்கியதை?’ என்று குழப்பம் விளைவித்தார்கள்.


இப்படிபட்ட அவதூறுகள், நம்மிடம் கேட்கப்படும் கேள்விகள், நமக்கு சொல்லும் அறிவுரைகள் எல்லாமே ஒரு புள்ளியில் மையமாக குவிகிறது. அது என்னவென்றால் அண்ணல் அம்பேத்கர் பின்னலாடை புறக்கணிப்பு என்னும் மையபுள்ளி.


இதுபோன்ற கேள்விகள், சந்தேகங்கள், அறிவுரைகள், அவதூறுகள் எதுவும் வேறு தலைவர்களின் பின்னலாடைகள் கொண்டுவந்தபோது, வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பல கூட்டங்களில் பெரியார், சே, பிரபாகரன் உருவம் பொறித்த பின்னலாடைகள் பல தோழர்கள் அணிய பார்த்திருக்கிறோம். ஆனால் அதை வெளியிட்ட தோழர்களுக்கு இவ்வளவு நடைமுறை சிக்கல்கள் நேர்ந்திருக்குமா?


அண்ணலின் உருவம் பொறித்த சட்டைக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆராய்ச்சியும் அறிவுரைகளும் என்று பார்த்தால் மறுபடியும் நாம் பணியாற்றும் களத்திற்கு தான் நம்மை கொண்டு வருகிறது. அது தான் “அண்ணல் தாழ்த்தபட்ட மக்களுக்கான தலைவர்” என்பது.


இந்த கருத்தை தான் நாம் உடைக்க வேண்டும். அண்ணல் தாழ்த்தபட்ட மக்களுக்காக மட்டும் பாடுபட்டவர் அல்ல. பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் பாடுபட்டவர்.


தாழ்த்தபட்ட பெண்களுக்களின் உரிமைக்காக மட்டும் அவர் பாடுபடவில்லை. பார்ப்பன பெண்கள் உட்பட்ட ஒட்டுமொத்த பெண்களுக்கான உரிமைக்காகவும் பாடுபட்டவர்.


ஆணாதிக்கத்திடம் இருந்து விடுபட்டு பெண்கள் தன் வாழ்க்கையை தனியே நடத்தி கொள்ளும் அளவிற்கு பெண்களுக்காக விவாகரத்து என்னும் உரிமையை, சட்டத்தின் மூலம் வழங்கியவர் அண்ணல். அதை பயன்படுத்தி அதிகமாக பலனடைவது பார்ப்பன பெண்களும் மேல் தட்டு வர்க்க பெண்களுமே!


பிற்படுத்த சமூகத்தில் குற்றப்பரம்பரையினர் என்பதை நீக்க சொல்லி நீதிகட்சியும் பெரியாரும் கடுமையாக முயற்சித்து நடைமுறைபடுத்தியபோது, அதை எளிமையாக சட்டமாக இயற்றி மாற்றியவர் அண்ணல் அம்பேத்கர். குற்றப்பரம்பரையினர் என்கிற இந்த கொடுமை பார்ப்பனியம் இந்து மதம் செய்த சதி என்று அதை அம்பலப்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.


இவ்வாறு தாழ்த்தபட்ட மக்களுக்காக மட்டுமல்லாது அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவராகத் தான் அண்ணல் உயர்ந்து நிற்கிறார்.


ஆனால் சாதி ஒழிக்க பாடுபட்ட அண்ணல் அவர்களை குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் தலைவராகத் தான் சாதி இந்துக்களும் பார்ப்பனர்களும் சாதிய கண்ணோட்டத்துடன் சுருக்கி வைத்துள்ளனர்.


இதை தகர்க்க வேண்டிய பொறுப்பு நமக்குத்தான் அதிகமாக உள்ளது.


அண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த ஆடையை கொண்டுவரும் நிகழ்வை முன்னெடுத்த, உறுதுணையாக இருந்த, உலக தமிழ் மக்கள் அரங்க நிர்வாகி சசி மற்றும் உறுப்பினர்களுக்கும், விழித்தெழு இளைஞர் இயக்கத் தோழர்களுக்கும், கார்டூனிஸ்ட் பாலாவிற்கும் இன்னும் பல தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.



தோழமையுடன்,

வேந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக