1782 ஆண்டு
வண்ணாரப்பேட்டை.
பஞ்சமும், போரும் மக்களை கொத்து கொத்தாக கொன்றுக்கொண்டிருந்த காலகட்டம். அந்த வீட்டில் மட்டும் எந்நேரமும் அடுப்பெரிந்து உலைக்கொதிக்க, தொட்டிகளில் ஊற்றப்படும் கஞ்சியினை மொண்டுகுடித்து பசியாறினர் மக்கள்.
பசியால், பஞ்சத்தால் மடிந்து வரும் மக்களை கண்டு கலங்கி நின்ற யாரோ ஒருவன் தன் கைகாசைப் போட்டு அங்கு கஞ்சித்தொட்டி திறந்திருந்தான்.
வரலாறு எப்பொழுதும் கட்டிடங்களையும் அதன் , கலையை, அழகை பதிவுசெய்துக்கொள்கிறதே தவிர அதன் பின் நின்று உழைத்தவர்கள் குறிப்புகளை ஒதுக்கிவைத்து விடுகிறது. அப்படியாகதான் அந்த பெரிய மனிதனின் பெயரும் வரலாற்று குறிப்புகளில் வரவு வைக்கப்படவே இல்லை.
வரலாற்றை போலொன்றும் இங்கிதம் கெட்டதல்ல காலம். அது அந்த பெரிய மனிதனை ‘மணியக்கார முதலியார்’ என்று கணக்கு வைத்திருக்கிறது.
‘மணியக்காரர்’!
அது தனியொருவரின் பெயர் அல்ல.
அதுவொரு பட்டம். அன்றைய கிராமத் தலைவரின் பட்டம். கிராமத்தில் பட்டாமணியார் அல்லது மணியக்காரர் என்பவர் கிராம நிர்வாகம் செய்பவர்.
அதாவது இன்றைய கிராமநிர்வாக அதிகாரி (VAO).
அவரது உண்மையான பெயரென்ன?
யாருக்கும் தெரியாது.
ஊருக்கே ஆக்கிப்போட,
இதென்ன சத்திரமா? சாவடியா? என்கிறோமே.. அப்படிதான் தோட்டத்து வீடு ‘சத்திரம்’ என்று அழைக்கப்போய்,
அதுவே,
‘மணியக்கார சத்திரம் சாலை’ என்றானது.
ஐதர் அலியும், திப்பு சுல்தானும் மெட்ராஸை கைப்பற்றிவிடுவார்களோ என்ற பயம் வெள்ளைக்காரர்களுக்கு இருந்தது.
மெட்ராஸ்சில் வந்து பதுங்கி அவர்கள் கோட்டையைத் தாக்கக்கூடும் என அஞ்சி மெட்ராஸ் முழுக்க அதாவது கருப்பர் நகரம் முழுக்க இருந்த கட்டிடங்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கும் முயற்சியில் இறங்கியது வெள்ளைக்கார அரசு.
இடித்துத்தள்ள இயந்திரங்களோடு வந்து நின்ற
துரைமார்கள், மக்கள் பசியறிந்து அதனை போக்க எவனோ ஒரு தனி மனிதன் செய்த சேவையின் அடையாளத்தை அழிக்க மனமின்றி திரும்பினர்.
மணியக்கார சத்திரம் சாலை எனும் அழகு தமிழ் பெயர் வழக்கம் போல் ஆங்கிலேயரால் கடித்து குதறி ‘மோனிகர் சவுல்ட்ரி ரோடு' என்று சிதைக்கப் பட்டது. சவுல்ட்ரி என்றால் ஆங்கிலத்தில் சத்திரம் என்பது பொருள்.
சொல்லப்போனால் ‘Choultry’ கூட ஆங்கில மொழிக்கு தமிழ் போட்ட பிச்சைதான். அதாவது வழிப்போக்கர்கள் தங்கும் இடத்திற்கு தமிழில் சாவடி என்று பெயர். அதைதான் ‘சவுல்ட்ரினு’ பேசி திரிகிறார்கள் அவர்கள்.
விஷியத்திற்கு வருவோம்.
அந்த மணியக்காரர் சத்திரம் ஆங்கிலேய குறிப்புகளில் ‘மோனிகர் சவுல்ட்ரி என இருக்க, நம்மாளுங்க தமிழ் படுத்துறேன் பேர்வழினு ‘மாணிக்கர் செளத்திரி’ ஆக்கிவைச்சுட்டாங்க.
இப்ப அதுக்கு... எம்.சி., சாலை என்று பெயர்
சரி அந்த சத்திரம் என்னதான் ஆச்சு?
மணியக்காரர் சத்திரத்தில் ஒரு மருத்துவமனை ஆரம்பித்தால் என்ன? .. யோசித்த டாக்டர் ஜான் அண்டர்வுட் அதனை சூட்டோடு சூட்டாக செய்தும் முடித்தார். ‘கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி’ என அழைக்கப்பட்ட அதுதான் பெயர் இப்போது..
‘ஸ்டான்லி மருத்துவமனை’
😊
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக