#கோவில்
தமிழக நிலப்பரப்பில் கோவில்களை பக்தியின் இருப்பிடமாக பார்ப்பது தான் நம் சமூகத்தின் பொதுப் புத்தியாக இருக்கின்றது. கோவில்கள் கட்டப்பட்டதைப் புனித அறச்செயல்களாக, அரசர்களின் அரும்பெரும் சாதனைகளாக, வணிகர்களின் வரலாற்றுச் சின்னங்களாக இன்றும் புகழப்பட்டு வருகிறது.
வளங்கொழிக்கும் இலட்சக்கணக்கான ஏக்கர்கள் நிலங்கள் கோவில்களுக்கு உடமையாக்கப்பட்டு இருக்கிறது. அந்த நிலங்கள் அனைத்தும் இறைவனுக்கு உரியன, இறைவனுக்கு உரியவை அனைத்தும் புனிதமானவை. ஆகவே மக்கள் அனைவரும் இந்த நிலங்களை கண்ணும் கருத்துமாக காப்பாற்றி வர வேண்டும். இதுவே குடியானவர்கள் கடமை என்றும், இந்த பெருத்த நில உடமைகள் அனைத்தும் கோவிலின் பொது சொத்துக்கள் என்றும் பெரும்பான்மையாக இருக்கின்ற உழைக்கும் மக்களிடம் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதிகளும் அவர்களது சூத்திர கூட்டாளிகளும் மட்டுமே நிலத்தின் மீதான உரிமைகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறனர். அதன் ஊடாக கிராம நிர்வாகங்களில் அதிகாரம் செலுத்தி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் கிராம நிர்வாகங்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையே கோவிலின் பெயரால் ஏகபோகமாக ஆண்டு வருகின்றனர், அனுபவித்து வருகின்றனர், அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.
கோவில் நிலம் சாதி ஆகிய மூன்றுக்கும் பொதுவான பெரும் தொடர்பு இருக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வுகள் கோவில்களில் இருந்தே துவங்குகிறது. பக்தியின் ஊடாக உருவாக்கப்பட்ட கோயில்கள் மனிதர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை புனிதம் என்கின்ற பெயரில் நியாயமாகிறது. நிலத்தின் மீது உரிமை கொண்டாடுகிறவன் அதிகாரத்தின் மீது உரிமை கொண்டாடுகிறான். நிலமற்றவன் அதிகாரம் அற்றவனாக இருக்கின்றான்.
கோயிலுக்குள் வராது என்பதும்,
கோயிலுக்கு போகாதே என்பதும்.. உழைக்கும் மக்களை அதிகாரம் அற்றவர்களாக தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் தானோ?
*சமரன்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக